கிருஷ்ண ஜெயந்தி
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு.
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவுக்கு அருகில் உள்ள மதுரா நகரத்தில் தேவகி - வாசுதேவருக்கு 8வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். மதுரா நகரில் பிறந்து கோகுலத்தில் எல்லாருக்கும் செல்லப்பிள்ளையாக கிருஷ்ணர் எனப்படும் கண்ணன் வளர்ந்தார்.
கிருஷ்ணர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது அந்த சிறைச்சாலைக்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே இன்றும் உள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடமாக வழிபடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்தது. அன்று விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்தில் கோகுலாஷ்டமி என்ற பெயரிலும், வட இந்தியாவில் 12ம் தேதி ஜென்மாஷ்டமி' என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் நடந்து வருவதாக நம்பப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்:
கிருஷ்ணர் பிறந்த போது வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான் ஆகிய மூவர் மட்டும் விழித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே கிருஷ்ண ஜெயந்தி பூஜை மாலை நேரத்தில் கொண்டாடப்படுவது மிகவும் சிறந்ததாகும்.
கிருஷ்ணனின் புகைப்படம் அல்லது விக்கிரகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து பூஜை செய்யலாம். வழிபாடு செய்வதற்கு முன்னர் அதனை நன்கு சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் திலகம் இட்டு வழிபாடு செய்யுமிடத்தில் ஒரு பலகை வைத்து அதன் மீது புகைப்படமோ அல்லது விக்கிரகத்தையோ வைத்து வழிபடவும்.
பூஜை தொடங்குவதற்கு முன் நெய் விளக்கேற்றி அதன் முன் பூஜை பொருட்களைவைத்து பிள்ளையாரையும், கிருஷ்ணரையும் வணங்கி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். வழிபாடு செய்வதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலை வைத்து அதில் சிறிது அரிசியை பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காயை கலசம் போல வைக்கவும். கலசத்தின் வலது புறம் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து அந்த கலசத்திற்கும் பிள்ளையாருக்கும் திலகம் இடவும், பூக்கள், மாலைகள் இட வேண்டும்.
கிருஷ்ணர் ஜெயந்திக்கான நெய்வைத்தியம்:
கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகள் மற்றும் நாவல் பழங்கள், விளாம்பழம் உள்ளிட்டவற்றைவைத்து வழிபட வேண்டும்.
எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.
விரத முறைகள்:
கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருந்தால் பல விஷேச பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது (ஒரு நாளிகை 24 நிமிடங்கள்) விரதம் இருப்பது நல்லது. இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் தீரும். மழலைச் செல்வம், குறையாத செல்வங்கள் போன்ற வரங்கள் கிடைக்கும். மேலும் விரதத்தின் போது பழங்கள், பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் அரிசியால் செய்ததைத் தவிர வேறு ஏதேனும் உணவை உண்ணலாம். பூஜைக்குப் பின் வெண்ணெய்யை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்ளலாம்.
கிருஷ்ண ஜெயந்திக்கு பூஜை செய்வதற்கான நேரம் :
அஷ்டமி திதி ஆகஸ்ட் 11ம் தேதி காலை 7.55 மணிக்கு தொடங்குவதால் அதன் பின்னர் எமகண்டம், குளிகை, ராகு காலம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரம் செய்ய உகந்த நேரமே.
காலை 7:30 முதல் 8:00 மணி வரை மாலை 4:45 மணி முதல் 5.45 மணி வரை நல்ல நேரமாகும்
காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை, மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை கெளரி நல்ல நேரமாகும்
இந்த நேரங்கள் பூஜை செய்ய மிகவும் உகந்தது. வட இந்தியர்கள் பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் கிருஷ்ண சிலைக்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
குழந்தை வரம் வேண்டும் பெண்கள் பூஜை செய்யும் போது கிருஷ்ணர் விக்ரகத்தை நம் மடியில் வைத்து, தாலாட்டுவது போலவும், அவருக்கு வெண்ணெய், பலகாரம் கொடுப்பது போன்று வழிபாடு செய்தால் நல்ல பலனை அடையலாம்.
பூஜை முடிந்த உடன் கிருஷ்ணருக்கு முன் வைத்துள்ள கலசத்தை வலது புறமாக நகற்றி வைக்கவும். பின்னர் கிருஷ்ணருக்கு படைத்த பலகாரங்களை அருகில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு நீங்களும் எடுத்து சாப்பிடலாம். பூஜை முடிந்த பின்னர் சந்திரனை பார்த்து வணங்குவது நல்லது.
கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை, சிறுவர், சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்விக்காக உங்களால் இயன்ற அளவு உதவி செய்யுங்கள். அப்படி செய்தால் நம் வாழ்வில் உள்ள எல்லா மனக்குறைகளையும் நீக்கி, மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றுவார்.
கோகுலாஷ்டமி அன்று குழந்தைக் கிருஷ்ணனை வீடுகளில் வரவேற்று எல்லா வளங்களை பெற்று நலமுடன் வாழ அனைவரையும் வாழ்த்துக்கிறோம்.
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்,
Comments
Post a Comment
subscribe Media 1 Television